சென்னை: சென்னை ஐஐடியின் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், மனிதனை மையப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு மையத்தை (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) இன்று தொடங்கியுள்ளது. இதில் தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் சங்கர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மையத்தை திறந்து வைத்தனர்.
இது குறித்து ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் மனித ஆற்றலைப் பெருக்கும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை கொண்டது. இந்த மையம் 5.0ன் பரந்த கொள்கைகளுடன் தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவும் நோக்குடன் செயல்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி, “இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும். ஐஐடி-எம் பிரவர்த்தக், உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம் (சன்சத் டிவி வழியாக), இந்திய ராணுவம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் திட்டப் பணிகளுக்கு பாதுகாப்பு தரும் அம்சமாக இந்த மையம் அமையும்” என்றார்.
இதையும் படிங்க: பிறந்தநாள் ஸ்பெஷல்.. 50 லட்சம் கைரேகைகள் கொண்டு வரையப்பட்ட உதயநிதி ஸ்டாலின் படம்!
இந்த நிகழ்ச்சியில் பேசிய தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், “செய்ற்கை நுண்ணறிவு மூலம் இந்த திட்டதின் கீழ் மனித குலத்தின் வாழக்கை முறை இன்னும் சிறப்பாக மாறும் என நம்புகிறேன். இந்த புதிய மையம் மத்திய-மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட்அப்கள், கல்வி ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, இந்தியாவில் மனித ஆற்றலை மேம்படுத்த வேண்டும். நாம் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய சென்னை ஐஐடி மின்பொறியியல் துறை பேராசிரியர் கவுரவ் ரெய்னா, “மனித மையத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் தொழில்துறை 5.0வின் பரந்த கொள்கைகளோடு இந்த மையத்தின் கவனம் ஒத்ததாக இருக்கிறது.
இந்த மையம் மூலம் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், கருவிகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் போன்ற வடிவங்களில் தாக்கத்திற்கு தீர்வுகள் வகிக்கும் வகையில் பயனுள்ள ஆராய்ச்சிகள் நடத்தபடும். மேலும் கல்வி, சுகாதாரம், நிதிச் சேவைகள், போக்குவரத்து, சட்டப்பூர்வ பரிசீலனைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த நோக்கத்தோடு இந்த செயற்கை நுண்ணறிவு மையத்தை செயல்படும் என நம்புகிறோம்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்