சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநரை விமர்சிப்பது தனி மனித தாக்குதல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று (ஜனவரி 09) வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிப்பதால் நகரங்களில் மாசு ஏற்படும் ஆபத்து இருப்பதால், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பண்டிகையின்போது பிளாஸ்டிக் மற்றும் டயர்களை கொளுத்துவதை நிறுத்த வேண்டும்.
மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் செயல்பாட்டில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்காமல் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால், புதிய தமிழகம் கட்சி மக்களுடன் போராட்டத்தில் ஈடுபடும். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்த புலன்விசாரணையில் ஏன் ஒரு நபர், இரண்டு நபர் என்று கூற வேண்டும்? இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக இல்லை.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், தற்போது ரூ.130 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பை வழங்கியுள்ளனர். இது தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு சமம்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை 23-ஆம் புலிகேசி படம் பார்ப்பது போல் உள்ளது - பாஜக தலைவர் அண்ணாமலை!
ஆளுநர் மீது அவதூறு பேசி குற்றச்சாட்டு பரப்புகின்றனர். இது நியாயமல்ல; தனிநபரை எந்த காரணத்தை கொண்டும் காயப்படுத்தக்கூடாது. சட்டசபையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் வாதம் குறித்த நேரலை ஒளிபரப்பை மறைப்பது நியாயம் அல்ல.
இது பெரியார் மண், முழுக்க முழுக்க அவர் தான் எல்லாம் செய்தார் என்று கூறுவதும், அதே சமயத்தில் பெரியார் ஒன்றுமே இல்லை; மண் என்று கூறுவதும் தவறானது. யாரும் செய்யாத காலத்தில் அவர் செய்ததை பாராட்ட வேண்டும். அவரை கொச்சைப்படுத்தவவோ, ஆய்வு செய்து பார்க்கவோ தேவையில்லை. பெரியாரின் சமூக மாற்றத்தை மட்டும் முன்னெடுத்தார், மற்றவற்றில் ஈடுபடவில்லை. இதற்காக அவரை குறை கூறுதல் கூடாது” என்று கிருஷ்ணசாமி கூறினார்.