கோயம்புத்தூர்: கோவை கணபதி உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா மற்றும் ரவி தம்பதியினர் தள்ளு வண்டியில் பீப் பிரியாணி, பீப் சில்லி கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி சுப்பிரமணி, ''இங்கு மாட்டிறைச்சி கடை வைக்க கூடாது'' என்று மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலானது. அதேசமயம் ஊர் கட்டுப்பாடு என்றும் கோவில் அருகில் மாட்டிறைச்சி உட்பட எந்த அசைவ உணவுகளையும் விற்கக் கூடாது என தெரிவித்திருந்ததாக சுப்பிரமணி நேற்றைய தினம் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அத்தம்பதியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சுப்பிரமணி மீதும் அவரோடு சேர்ந்து வந்து மிரட்டிய அடையாளம் தெரியாத 6 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.
பீப் சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை
இது குறித்து பேட்டியளித்த அவர்கள், '' கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து கடை நடத்தி வருகிறோம். பாஜக சுப்பிரமணி உட்பட அடையாளம் தெரியாத சில ஆட்கள் வந்து மிரட்டினார்கள். இதனால் அன்றைய தினம் 6,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் யாரையும் பீப் சாப்பிட கட்டாயப்படுத்தவில்லை. சாதி பிரச்சனை ஆகிவிடும் என்றெல்லாம் பேசினார்கள்.
இதையும் படிங்க: “இந்த பகுதியில் பீப் பிரியாணி கடை இருக்க கூடாது”- வைரலான வீடியோ காட்சி... நடந்தது என்ன?
ஊர் மக்களால் நெருக்கடி இல்லை
நாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் என அனைவரிடமும் அனுமதி பெற்று தான் கடை வைத்தோம். கவுன்சிலர் தான் போட்டு கொள்ளும்படி கூறினார். தற்போது கவுன்சிலர் மாற்றி பேசுகிறார். எங்களுக்கு எந்த தொழில் தெரிகிறதோ அதை தான் செய்ய முடியும், பீப் என்ன அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், கடை போட அனுமதி வேண்டும், அந்த பாஜக நபரை கைது செய்ய வேண்டும். மீன் கடை போட்டுள்ளவர்களிடம் அவர்கள் தகராறு செய்யமாட்டார்களா? ஊர் கட்டுபாடு எல்லாம் அங்கு இல்லையா? ஊர் மக்கள் எங்களுக்கு எந்த நெருக்கடியும் தரவில்லை. ஊர் மக்கள் அவர்களை எதிர்க்க தயங்குகிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் தானே எங்கள் கடையை எடுக்க சொல்லி இருக்க வேண்டும். என் உயிரே போனாலும் பரவாயில்லை, நான் கடை போடுவேன். காவல்துறையினர் இரவு வரை எங்களிடம் விசாரித்தார்கள். அனைத்து கடைகளும் எடுக்கும் பட்சத்தில் நாங்களும் கடையை எடுக்கிறோம் என்று கையெழுத்து இட சொன்னார்கள்'' என தெரிவித்தனர்.
பாய்ந்தது வழக்கு
இந்த நிலையில், பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது துடியலூர் போலீசார் 351(2)- குற்ற எண்ணத்துடன் மிரட்டல் விடுப்பது, 126(2) - தனி நபர்களின் செயல்களை தடுப்பது, 192- சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்து ஆத்திரமூட்டுவது, 196 - மதம், இனம், மொழி, சாதி அடிப்படையில் பகைமையை ஏற்படுத்த முயல்வது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.