தூத்துக்குடி:கோவில்பட்டியில் இயங்கி வரும் தீப்பெட்டி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்திக்கான இயந்திரங்கள் சேதமடைந்ததாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான ராமகிருஷ்ணா தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையை செண்பக விநாயகமூர்த்தி மற்றும் சிராக் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (பிப்.7) வழக்கம் போல தீப்பெட்டி ஆலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென இயந்திரப் பகுதியில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
இதையும் படிங்க:உலகிலேயே முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்... சாதனை படைக்கவுள்ள சென்னை மெட்ரோ!
இந்த தீ விபத்தில அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த எட்டயபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீப்பெட்டி ஆலையை விட்டு வெளியேறினர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
பின்னர், கோவில்பட்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆலையின் மற்ற பகுதியிலிருந்து தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் மூலப் பொருட்கள் வெளியேற்றப்பட்டன. இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி உற்பத்திக்கான இயந்திரங்கள், தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் கட்டிடம் உள்ளிட்டவை சேதம் அடைந்ததாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திடீரென தொழிற்சாலையில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவில்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.