சென்னை: கடந்த மார்ச் மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் மூன்று நபர்களிடமிருந்து நான்கு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும், சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து கைமாற்றி நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சுமார் ஒரு மாத காலமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 16ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த முரளிதரன் மற்றும் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் மணிகண்டன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகினர்.