கோவை: 2019ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவப் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபணம் ஆகியிருப்பதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தண்டனை விவரம் வரும் 29ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை கனகராஜின் வீட்டார் ஏற்று கொள்ளாத நிலையில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் தனியாக அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர்.
இதனையடுத்து கனகராஜின் மூத்த சகோதரர் வினோத் கனகராஜின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் தாக்கியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனைதடுக்க வந்த வர்ஷினி பிரியாவையும் வெட்டி கொலை செய்தார். கடந்த 2019 ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கனகராஜ் சகோதரர் வினோத் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்கள் சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். கோவை பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
நண்பர்கள் விடுதலை: இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி விவேகானந்தன், "இந்த வழக்கில் கூட்டுசதி என்ற பிரிவில் பதியப்பட்ட வழக்கு ஆதாராபூர்வமாக நிருபிக்கப்பட வில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட வினோத்தின் நண்பர்கள் 3 பேரும் விடுவிக்கப்படுகின்றனர். மேலும் முதல் குற்றவாளி வினோத் மீதான குற்றம் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வினோத் மரண தண்டணை விதிக்கும் அளவிற்கு குற்றம் செய்துள்ளார். வரும் 29 ம் தேதி அதிக பட்ச தண்டனை வழங்குவது குறித்து இருதரப்பு வாதங்கள் கேட்கப்படும். வழக்கின் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பு வரும் 29 ம் தேதி வழங்கப்படும்,"என்றார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.பா மோகன்,"இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமார் கடந்த 25-06-2019 அன்று தனது தம்பி கனகராஜ், வர்ஷினி பிரியா ஆகியோரை வெட்டி கொலை செய்துள்ளார். வர்ஷினி பிரியா தாயார் அமுதா புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
மேல்முறையீடு: விசாரணையில்16 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 120 பி கூட்டுசதி பிரிவில் 4 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதே வேளையில் முதல் எதிரியான வினோத்குமார் கனகராஜை திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார். அதிகபட்ச தண்டணையாக மரணதண்டணை கொடுக்கும் அளவிற்கு குற்றம் புரிந்துள்ளார் என நீதிபதி தெரிவித்துள்ளார். 29 ம் தேதி நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் 3 பேரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்," என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா,"விக்னேஷ்க்கு வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு சரியானது. அதே வேளையில் 3 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். திட்டமிட்டு படுகொலை நடத்தப்பட்டு இருக்கின்றது,"என்றார்.