சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் குறிப்பிட்டதாக ''யார் அந்த சார்'' என்ற கேள்விக்குறியோடு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் கைதான கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு, ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக நேற்று முன்தினம் இரவு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கைதிகளுக்கான வார்டில் ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜன.23) காலை அவரை டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
வலிப்பு நாடகம்?
மேலும், மருத்துவர்கள் பரிசோதனையில் ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உடனடியாக ஞானசேகரனை டிஸ்சார்ஜ் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் உள்ள பல்வேறு சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஏழு நாட்கள் காவலில் எடுத்திருந்த நிலையில், விசாரணையை திசை திருப்பும் நோக்கத்திலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் நோக்கத்திலும் ஞானசேகரன் வலிப்பு நாடகம் நடத்தியது ஏன்? எந்த தகவலை ஞானசேகரன் மறைக்க பார்க்கிறார்? என காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பாக மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவின் கஸ்டடியில் கொண்டுவரப்பட்டுள்ள ஞானசேகரனிடம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆறு காவலர்கள்
மேலும், ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் இரண்டு தொடர்பு எண்களையும் சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக கண்காணித்துள்ளது. அதன்படி, அவருடன் அடையாறு காவல் நிலைய ஆறு காவலர்கள் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அந்த காவலர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவைகளை வைத்து ஞானசேகரனிடம் காவலர்கள் என்ன மாதிரியான உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்? ஞானசேகரன் தரப்பில் இருந்து இவர்களுக்கு புகைப்படமோ அல்லது வீடியோ பதிவுகளோ ஏதும் அனுப்பப்பட்டுள்ளதா எனவும் சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
பிரியாணி கடை
மேலும், அந்த காவலர்கள் ஆறு பேரிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அடையாறு காந்திநகர் பகுதியில் ஞானசேகரன் நடத்தி வந்த பிரியாணி கடையில் அடிக்கடி பிரியாணி சாப்பிடுவோம் எனவும் காசு கொடுக்காமல் பிரியாணி சாப்பிடுவதற்காக ஞானசேகரனை தொடர்புகொள்வோம் எனவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலைய எழுத்தாரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
அது மட்டுமின்றி அபிராமபுர காவல் நிலையத்தை சேர்ந்த மற்ற காவலர்களிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துகின்றனர். அதில் முதல் தகவல் அறிக்கை எப்போது தயார் செய்யப்பட்டது? கணினியில் யார் மூலம் பதிவேற்றப்பட்டது? யார் சரி பார்த்தது போன்ற கேள்விகளை முன் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், முதல் தகவல் அறிக்கையை சமூக வலைதளத்தில் பரப்பிய நபர்களை கண்டறிந்தும் அவர்களும் இந்த வழக்கின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.