ஆரோக்கியமான, அழகான கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவுவது பொதுவானது. அதே போல், சிலர் சருமத்திற்கு, பலர் சமையலுக்கு என பயன்படுத்துவார்கள். ஆனால் வீட்டின் சுவரில் உள்ள அழுக்குகளை நீக்குவது முதல் இரும்பு பொருட்களில் உள்ள துருவை நீக்குவது வரை தேங்காய் எண்ணெயை பல வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க.
- வீட்டில் குழந்தைகள் இருந்தால், சுவற்றில் கறைகள், கீறல்கள் இருப்பதை பற்றி சொல்லவே தேவையில்லை. சுவர்கள், மரச்சாமான்கள் மற்றும் பிற பொருட்களில் பேனா, பென்சில், மை மற்றும் க்ரேயன் கொண்டு பல்வேறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். இவற்றை சுத்தம் செய்யாமல் விடும் போது, காலப்போக்கில் கறைகளாக படிந்து விடுகின்றன. மார்கெட்டில் கிடைக்கும் பல கிளினிங் லிக்விட்களை வைத்து சுத்தம் செய்தாலும் கை வலி மட்டுமே மிஞ்சும். அந்த வகையில், இந்த கறைகளை எளிமையாக போக்க, கறைகளின் மீது சிறிது தேங்காய் எண்ணெய் தடவி, அதன் மீது பேக்கிங் சோடாவை தூவி பிரஸ் மூலம் தேய்த்தால் கடினமான கறைகளும் எளிதில் நீங்கிவிடும்.
- காய்கறிகளை நறுக்குவதற்கு நாம் பயன்படுத்தும் கட்டிங் போர்டில் உள்ள கறைகளை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய் நன்றாக வேலை செய்கிறது. காய்கறிகளை வெட்டும் போது, கீறல்கள் ஏற்படுகின்றன. இதில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், அவ்வப்போது, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்வதால் இந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.
- லெதர்களை புதியது போல் மாற்ற தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். லெதர் காலணிகள் மற்றும் பைகளை தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பாலிஷ் செய்வதால் புதியது போல் மின்னும். இதற்கு, ஒரு காட்டன் துணியில் தேங்காய் எண்ணெய்யை கொஞ்சமாக நனைத்து பாலிஷ் செய்ய வேண்டும்.
- குழந்தைகள் அறியாமையில் சியிங் கம்மை சுவரில் அல்லது தரையில் ஒட்டி விடுவார்கள். இதனால், கறை படிந்து அந்த இடம் கருப்பாக மாறிவிடும். இதனை என்ன முயற்சி செய்து கழுவினாலும், பிசுபிசுப்பு தன்மையுடன் கறை அப்படியே இருக்கும். இதை அகற்ற, தேங்காய் எண்ணெயை சிறிது தடவி, 5 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்தால் கறை முற்றிலுமாக நீங்கிவிடும்.
- பருவமழை மற்றும் குளிர்காலங்களில் கத்திரிக்கோல், பூட்டு மற்றும் கதவுகள் துருப்பிடித்து பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கும். இந்த மாதிரியான சூழலில், தேங்காய் எண்ணெயை இந்த துருப்பிடித்த இடத்தில் தடவி பயன்படுத்தினால் எளிமையாக இருக்கும்.
- வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் பயன்படுத்தப்பட்ட திரை சீலைகளை மாதத்திற்கு ஒரு முறை என சுத்தம் செய்வது வழக்கம். ஆனால், திரை சீலைகள் தொங்க விட உதவும் இரும்பு கம்பிகளை நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விடுகிறோம். அவ்வப்போது, அந்த கம்பியில் தேங்காய் எண்ணெயை தடவி வருவதால், துருப்பிடிப்பதை தடுக்க முடியும்.
இதையும் படிங்க:
சமையலை ஈஸியாக்கும் 7 கிச்சன் டிப்ஸ்...நோட் பண்ணிக்கோங்க!
வீட்டிலேயே சாஃப்டான பனீர் செய்வது எப்படி? உங்களுக்காக 4 சூப்பர் டிப்ஸ் இதோ!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.