சென்னை: தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு பெற்றதை முன்னிட்டு, நேற்று திமுகவின் பவள விழா கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வருகிற 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கி நடத்தும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
இதனையடுத்து கூட்டணி கட்சியைச் சேர்ந்த கி.வீரமணி, முத்தரசன், ஜவாஹிருல்லா, வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட இதர தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இவ்வாறு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தால், திமுகவின் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் மேடையில் பங்கேற்பர் எனவும், இதன் மூலம் திமுகவின் கூட்டணியில் விரிசல் என்ற எதிர்கட்சிகளின் பேச்சுகள் முறியடிக்கப்படும் எனவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய முக்கிய தகவல் என்ன?
முன்னதாக, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற திருமாவளவனின் மேடைப்பேச்சு அரசியல் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும், இது திமுக - விசிக கூட்டணியில் விரிசலை உண்டாக்கியதாகவும் அரசியல் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அப்படி எந்தவித முரண்பாடும் இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.
திமுக அழைப்பிதழ் (Credits - DMK 'X' Page) அது மட்டுமல்லாமல், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து வெளியே வந்த அவர், அதிகாரத்தில் பங்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் தான், காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் திமுக் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.