கும்பகோணத்தில் காரில் வைத்திருந்த பணப்பை திருட்டு தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ருக்மணி சமஸ்தான் அறக்கட்டளைக்கு (Sri Vittal Rukmini Samsthan in Govindapuram) சொந்தமான தெட்சண பண்டரிபுரம் எனப் போற்றப்படும் மிக உயரமான கோபுரத்துடன் கூடிய பாண்டுரெங்கன் கோயில் மற்றும் அதனுடன் இணைந்த ஆயிரம் பசுக்களைப் பராமரிக்கும் கோசாலையுடன் இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் திருக்கோயிலுடன் இணைந்த சமஸ்தான் குடியிருப்பிலேயே தங்கியபடி, கண்காணிப்பாளராக பல ஆண்டுகளாக பணி செய்துவருபவர், சந்திரசேகரன்(35).இந்நிலையில், இவர் நேற்று (பிப்.22) அசூர் புறவழிச்சாலை மற்றும் கொரநாட்டுக்கருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளைகளில் இருந்து அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.17 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு நிறுவனத்தின் காரில் திரும்பியுள்ளார்.
மேலும், எடுத்த அந்தப் பணத்தை ஒரு கட்டைப்பையில் வைத்துக் கொண்டு, கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள காமாட்சி ஜோசியர் தெருவில் இயங்கி வரும் பிரபல காபித்தூள் கடையில் (மோகன் காபி) காபித்தூள் வாங்க கார் கதவினை பூட்டாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடைக்குச் சென்று திரும்பிய சில நிமிடங்களில், காரில் வைத்திருந்த கட்டைப்பை பணத்துடன் மாயமாகியுள்ளது.
பின்னர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சந்திரசேகர் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றப்பிரிவு போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து புகாரின் உண்மைத்தன்மைக் குறித்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும், காரில் இருந்த பணப்பை மாயமான மர்மம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரில் இருந்த ரூ.17 லட்சம் மாயமான சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, காரை தனியாக ஓட்டி வந்த கண்காணிப்பாளர் சந்திரசேகர், பணப்பையை காரில் முன்பக்க ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அலட்சியமாக கார் கதவைப் பூட்டாமல் சென்றது ஏன்? இத்திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி.. நடந்தது என்ன?