சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஏறக்குறைய பத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ஷங்கர் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில் ’வணங்கான்’, மற்றும் ’மெட்ரஸ்காரன்’ ஆகிய படங்கள் இன்று (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியாகி விட்டன. தியேட்டரில் வரிசை கட்டி படங்கள் வெளியாவதைப் போல பொங்கல் விருந்தாக ஓடிடியிலும் படங்கள், வெப் சீரியஸ்கள் வெளியாகி உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
மிஸ் யூ (Miss You) : ’சித்தா’ திரைப்படத்திற்கு பிறகு சித்தார்த் நாயகனாக நடித்து வெளிவந்த படம் ’மிஸ் யூ’. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பால சரவணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. ரொமாண்டிக் டிரமாகவாக அமைந்திருந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இந்நிலையில், ’மிஸ் யூ’ திரைப்படம் இன்று (ஜனவரி 10) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சூக்ஷமதர்ஷினி (Sookshmadarshini) : நஸ்ரியாவும் ஃபாசில் ஜோசப்பும் இணைந்து நடித்த இப்படத்தை எம்.சி.ஜித்தின் இயக்கியுள்ளார். இவர்களுடன் மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். நான்கு ஆண்டுகள் கழித்து நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த மலையாள படம் இது. கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்த நிலையில் மிக நீண்ட நாட்களாக இதன் ஓடிடி வெளியிடு எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஜனவரி 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
அதோமுகம் : சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'அதோமுகம்'. அருண் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். விறுவிறுப்பான திரில்லர் கதையசம் கொண்ட இப்படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (ஜனவரி10) வெளியாகியுள்ளது.
த சபர்மதி ரிப்போர்ட் (The Sabarmati Report) : 12th Fail நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா ஆகியோர் நடித்த இப்படத்தை தீராஜ் சர்னா இயக்கியுள்ளார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது Zee5 ஓடிடியில் இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 2024 இல் உலகளவிலான திரைப்பட ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் படங்கள் பட்டியல் இதோ!
பிளாக் வாரண்ட் (Black Warrant) : விக்ரமாதித்யா மோட்வானே (Vikramaditya Motwane) உருவாக்கியுள்ள வெப் சீரியஸ் இது. பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரான விக்ரமாதித்யா, Sacred Games, Jubilee போன்ற வெப் சீரியஸ்களையும் Trapped, CTRL போன்ற படங்களையும் இயக்கியவர். ஸாகன் கபூர், ராகுல் பட், பரம்வீர் சிங், அனுராக் தாகுர் ஆகியோர் இந்த வெப் சீரியஸில் நடித்துள்ளனர்.
’Black Warrant: Confessions of a Tihar Jailer’ எனும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த வெப் சீரியஸை உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் மிக முக்கிய சிறைச்சாலையான திகார் சிறைச்சாலையில் 1980கள் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்டுள்ளது 'பிளாக் வாரண்ட்' வெப் சீரியஸ். ஏழு எபிசோட்களைக் கொண்டுள்ள 'பிளாக் வாரண்ட்' வெப் சீரியஸ் இன்று (ஜனவரி 10) நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.