கோயம்புத்தூர்: வால்பாறையை அடுத்த வாழைத் தோட்டம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் உலா வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை வாழைத்தோட்டம், எம்ஜிஆர் நகர், அண்ணா நகர், கக்கன் காலனி, கூட்டுறவு காலனி, துளசி நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய காலங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
நள்ளிரவில் வரும் சிறுத்தைகள் அப்பகுதியில் உள்ள வீட்டு வளர்ப்பு பிராணியான நாய், ஆடு, கோழி, பூனை உள்ளிட்ட விலங்குகளை பிடிப்பதற்காகவே குடியிருப்பு பகுதியை நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: களைகட்டிய சர்வதேச பலூன் திருவிழா... ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்!
இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் வால்பாறை பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நாய், பூனை, கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டு விலங்குகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனவும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலா வருவதால் மனிதர்களை தாக்கக்கூடிய நிலை உள்ளது எனவே, வனத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதற்கிடையே வாழைத் தோட்டம் பகுதியில் உலா வந்த இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. இரண்டு பக்கங்களிலும் வீடுகள் இருக்க, நடுவில் உள்ள கான்கிரீட் தரையில் இரு சிறுத்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக இரையை தேடி செல்வது அந்த காட்சியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், அந்த நேரத்தில் மனிதர்களோ அல்லது வளர்ப்பு விலங்கோ சிக்கியிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.