சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் பந்தயத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த ஆண்டே ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது துபாயில் நடைபெற்று வரும் 24H Dubai 2025 கார் ரேஸில் பங்கேற்றுள்ளார். இந்த கார் பந்தயத்திற்கென தீவிரமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அஜித்குமார் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. கார் மட்டும் பலத்த சேதமடைந்தது.
தற்போது நடைபெற்று வரும் 24H Dubai 2025 கார் பந்தயத்திற்கு இடையே அஜித்குமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்திற்கு பின் அஜித்குமார் அளித்திருக்கும் முதல் பேட்டி இது. அந்த பேட்டியில்,”கார் பந்தயத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். ஒரு போட்டியாளராக மட்டுமின்றி அணியின் உரிமையாளராகவும் இதை கூறுகிறேன். வெவ்வேறு கார் பந்தயங்கள் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை.
" as a team owner untill the racing season is on, i wouldn't be signing any films✍️. probably between october & march i will be doing films🎬, so that no one is worried and i can fully focus on racing🏎️"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 10, 2025
- #Ajithkumar pic.twitter.com/6smTAw5Jj9
இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். மீண்டும் கார் பந்தயங்கள் தொடங்கும் வரை படங்களில் நடிப்பேன். அதனால் யாருக்கும் எந்த கவலையும் இருக்காது. கார் பந்தயங்களில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்த முடியும்” என அஜித்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக அந்த பேட்டியில் அஜித்குமார், “தனது கடந்தகால மோட்டார் சைக்கிள் ரேஸ் அனுபவங்கள் பற்றியும் பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டதை பற்றியும் சுவாரஸ்யமாக நினைவுகூர்ந்தார். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு கார் பந்தயங்களில் கலந்து கொள்ள முடியாததற்கும் வருத்தம் தெரிவித்தார். தற்போது நான் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என யாரும் சொல்லமுடியாது." என்று தமது பேட்டியில் அஜித் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு என்னென்ன பார்க்கலாம்... இந்த வார ஓடிடி புது வரவுகள் என்ன?
துபாயில் நடைபெறும் 24H Dubai 2025 கார் ரேஸில் ஒவ்வொரு அணியில் இருக்கும் நான்கு பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் 24 மணி நேரமும் காரை ஓட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் அஜித்குமார்.