மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டிஷ் அரசின் மிகவும் கெளரவமிக்க தி மோஸ்ட் எக்ஸ்சலண்ட் ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (சிவில் டிவிஷன்) [The Most Excellent Order of the British Empire (Civil Division)] விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள என்.சந்திரசேகரன், "இந்த விருது மிகப் பெரும் மதிப்புமிக்க அங்கீகாரம் ஆகும். நான் மிகவும் பணிவுடன் இதனை ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நான் மன்னர் சார்லஸுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தொழில்நுட்பம், வாடிக்கையாளர்கள், விருந்தோம்பல், எஃகு, ரசாயனப் பொருட்கள் மற்றும் வாகனத் துறைகளில் இங்கிலாந்துடன் மிகவும் வலுவான உத்திசார் செயல்பாட்டு உறவைக் கொண்டிருப்பதில் டாடா குழுமம் பெருமை கொள்கிறது என்பதை நான் மனமாற தெரிவிக்க விரும்புகிறேன்.
இதையும் படிங்க: "3 மாதங்களில் இன்னும் அதிக மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை" -திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் டெட்லி போன்ற எங்களுடைய புகழ் பெற்ற பிரிட்டிஷ் பிராண்டுகளைப் பற்றி நம்ப முடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். நாங்கள் இங்கிலாந்தில் 70,000-க்கும் அதிகமானமானவர்களைப் பணியமர்த்தி இருக்கிறோம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், வார்விக் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வான்சீ பல்கலைக்கழகம் உள்ளிட்ட இங்கிலாந்தில் உள்ள மிகச்சிறந்த நிறுவனங்களுடன் மிகவும் பயனுள்ள மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடர்பான கூட்டு செயல்பாடுகளை நாங்கள் உற்சாகமாக மேற்கொண்டு வருகிறோம்.
எங்களது குழுமத்திற்கு மாபெரும் ஆதரவை அளித்திருக்கும் மாட்சிமை பிரிட்டஷ் மன்னருக்கும், அரசுக்கும் டாடா குழுமத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் வலுவான, நீண்டகாலம் நீடித்து நிலைக்கும் உறவு என்பதில் மகிழ்ச்சி. பிரிட்டனில் எங்களது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். இந்த மாபெரும் கௌரவத்தை எனக்கு அளித்தமைக்கு மீண்டுமொரு முறை நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்,”என்று தெரிவித்துள்ளார்.