விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தந்தையை இழந்த பள்ளி மாணவி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு செல்லும் போது, அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி சரவணன் (25) என்பவர் கடந்த மூன்று மாதங்களாக வழிமறித்து, நான் உன்னை காதலிப்பதாகவும், நீ என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன எட்டாம் வகுப்பு மாணவி தனது தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாயார், சரவணின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அப்போது என் கணவர் இறந்து ஓராண்டு கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு பிரச்சனை என் குடும்பத்தில் உங்கள் மகனால் ஏற்படுகிறது. இதற்கு மேல் உங்கள் பையன் ஏதாவது தொல்லை கொடுத்தால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என தன் வேதனையை வெளிப்படுத்தியதாகவும், அதற்கு சரவணன் குடும்பத்தினரும் என் மகனால் உங்கள் மகளுக்கு எவ்வித தொல்லையும் வராது என வாய்மொழியாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இரவு அப்பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சென்றுல்ளனர். அப்போது மாணவியை வழிமறித்த சரவணன், அவரது கையைப் பிடித்து இழுத்து 'நீ என்னை திருமணம் செய்தும் கொள்ள வேண்டும், இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டேன்' என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
சரவணனுக்கு உடந்தையாக அவரது சகோதரியும், அவருடைய கணவரும், விழுப்புரம் தவெக வடமேற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான குண சரவணன் ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி தனது வீட்டுக்கு சென்று, தனது தாயிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவி அன்று இரவு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அவரை செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பள்ளி மாணவியின் தாயார், செஞ்சி காவல் நிலையத்தில் தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சரவணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி, மைத்துனர் குண சரவணன் ஆகிய மூவர் மீது புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: திமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவி! - APPOINTMENT OF DT IN CHARGES IN DMK
இதனைத் தொடர்ந்து போக்சோ, மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது சகோதரி மற்றும் மைத்துனர் குண சரவணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.