சென்னை: வரும் 3 மாதங்களில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை இன்று நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு 4 கிராம் பொன் தாலி மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இன்று மிக மிக முக்கியமான நாளாகும். சிலர் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்பார்கள். காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா? இன்று மட்டும் அல்ல ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு இணையர்களும் நல்ல காதலர்களாக நண்பர்களாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட் விவகாரம்: மனைவி அதிர்ச்சி பேட்டி!
2022 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 1800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 700 திருமணங்களை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறன. இங்கு உள்ள மணமகள்களில் பலர் பட்டதரிகளாக உள்ளனர். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இந்திய அளவில் உயர் கல்வி பயில்வோரில் 47 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். வீடு நன்றாக இருந்ததால் தான் நாடு நன்றாக இருக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று படி மணமக்கள் வீட்டை நன்றாக கவனியுங்கள். நாட்டை முதல்வர் பார்த்துக் கொள்வார். வரும் 3 மாதங்களில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 1 மணி நேரம் 20 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றி ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முறை கூட தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்கவில்லை. ஆக்கிரமிப்பில் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது"என்றார்.