சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள், உள்கட்டமைப்பு சார்பு அணிகள் பலவற்றுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, அக்கட்சியின் தலைவர் விஜய் மேற்பார்வையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இந்த வாரத்திற்குள் இறுதி செய்யப்பட வேண்டும் என, கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டதன் பெயரில், இன்று (ஜன.10) சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் உயர்மட்ட பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டத் தலைவர்கள், அணி பொறுப்பாளர்கள் என ஐந்து நபர்கள் வீதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்திற்கு இரண்டு மாவட்டச் செயலாளர் அல்லது இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விதத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு இறுதி பட்டியலை தலைமைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனித்தனியாக சந்தித்து ஆலோசனை
இந்த நிலையில், மாவட்ட செயலாளராக நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக கட்சி தலைவர் விஜயை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வழக்கறிஞர் அணி, மகளிர், இளைஞர் அணி உள்ளிட்ட மாநில, மாவட்ட உள்கட்டமைப்பு சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவர்களது இறுதி பட்டியலும் அக்கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இரு அணிகளாக பிரிந்து கட்சிக்கு வேலை செய்து வருவதால் மாவட்ட செயலாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இன்று பனையூரில் நடைபெறும் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்டங்களில் இரு தரப்பாக வேலை செய்யும் நபர்களையும் அழைத்து புஸ்ஸி ஆனந்த் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தல்
குறிப்பாக, மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நபர்கள் பிரச்சனைகள் எதுவும் செய்யாமல், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பொறுப்பாளருடன் சேர்ந்து கட்சி வளர்ச்சிக்காக பணி செய்ய வேண்டும் எனவும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பொறுப்பாளராக பணி செய்து வந்த அஜிதா ஆக்னல் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாமல், மற்றொரு நபருக்கு வழங்க இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதால் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனையூருக்கு வந்துள்ளார். பின்னர் புஸ்ஸி ஆனந்திடம் அவர், தான் வெகு நாட்களாக கட்சிப் பணியை செய்து வருகிறேன் என தெரிவித்து தனக்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அஜிதா ஆக்னலிடம், மாலை 4 மணிக்கு வந்து அலுவலகத்தில் சந்தித்து அலோசனை நடத்தலாம் என புஸ்ஸி ஆனந்த் கூறியதை அடுத்து அவர் ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.
நீயா நானா?
தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் பொறுப்பாளராக அஜிதா ஆக்னல் இருந்து வருகிறார். இவர் பல்வேறு இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களையும் கட்சியில் உறுப்பினராக சேர்க்க மாவட்டம் முழுவதும் சுற்றி வருகிறார். அதேபோல, கட்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற பொறுப்பாளராக பாலா என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும்தான் கட்சி தொடங்கப்பட்டத்திலிருந்தே நீயா நானா? என கடுமையான கோஷ்டி பூசல் நிலவி வருகிறது.