மதுரை: மாமன்னர்கள் மருது பாண்டியர் 223ஆவது குருபூஜையை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேகே நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது; ''அரசின் அலட்சிய போக்கால் இன்றைக்கு ஒரு நாள் மழைக்கே, இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி மதுரை தனித்தீவாக மாறியுள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுவதால் அந்தமான் தீவு போல உள்ளது. குறிப்பாக செல்லூர் பகுதியில் உள்ள முல்லை நகரில் மழை சூழ்ந்ததால் ஆயிரம் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வாய்க்காலில் இருந்து செல்லூர் கண்மாய்க்கு நீர் வரத்து உள்ளது. இதை தூர்வார மக்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 10 அடி ஆழமுள்ள கண்மாய் தற்போது 4 அடியாக உள்ளது. மழை குறித்து அறிக்கை வெளியிட்டார்கள், ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிடவில்லை. ஆய்வுக் கூட்டங்களில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டதா என்று கூட தெரியவில்லை.
இதையும் படிங்க:தீபாவளி; ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்
மதுரை புவியியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் மிகவும் மேடான பகுதி. இவ்வளவு மேடான பகுதியில் தண்ணீர் வர யார் காரணம்? கண்மாய், கால்வாய்களை தூர் வராமல், ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாத காரணத்தால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவு தான் மழை பெய்துள்ளது. அமைச்சர் நேரு இரவு நேரம் பார்த்துவிட்டு இரவோடு இரவாக ஊருக்கு திரும்பிவிட்டார்.
அதிமுக ஆட்சி காலத்தில் மழையே பெய்யவில்லை என்று அமைச்சர் நேரு கூறுகிறார்.. அதிமுக ஆட்சிக் காலத்தில் வர்தா புயல், கஜா புயல், ஒக்கி புயல் என 12 புயல்களை எதிர்கொண்டோம். அப்போது அமைச்சர் நேரு இங்கு இருந்தாரா? அல்லது வெளிநாடு சென்று விட்டாரா? ஏற்கனவே இருக்கும் வடிகாலை ஆழப்படுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
இன்றைக்கு பந்தல்குடி கால்வாய் குப்பை கூளமாக உள்ளது. இதனால் தான் இன்றைக்கு மழை நீர் குடியிருப்புக்குள் புகுந்து விட்டது.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகியோர் மழை குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிந்து விட்டது. தொடர்ந்து திமுகவை ஆதரித்தால், மக்கள் தண்டித்து விடுவார்கள் என அவர்களுக்கும் தெரிந்து விட்டது'' என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்