விழுப்புரம்: அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் அதன் பின்னர், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் பிரசாரத்தில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், 'தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது வாடிக்கையான ஒன்று' என்றும் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில், பாமகவின் நிலைப்பாடு என்ன? என செய்தியாளர்கள் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு, 'தேர்தல் முடியட்டும்' எனப் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரிந்துரை அளிக்க கால அவகாசம் நிறைவடைந்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.