தேனி: தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள பரசுராமபுரம் பகுதியில், பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பின்னே வந்த கார் முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது கார் மோதியுள்ளது. அப்படி மோதியதில் ஆட்டோ சாலையில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 4 வயது சிறுவன் பவின்பாண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்(50), இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 4 பெண்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் விபத்தில் காயமடைந்த பெண்களை உடனடியாக வத்தலக்குண்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் விபத்தில் பலியான சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரின் உடலையும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பின்னர் விபத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.