திருச்செந்தூர்: தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பணி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. காணிக்கைகளை எண்ணுவதற்கு உண்டியல்கள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இதையும் படிங்க: மழலைகளின் பாரம்பரிய சிலம்பம் பொங்கல் கொண்டாட்டம்! மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்..
இதில் 4 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரத்து 172 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், 1603 கிராம் தங்க பொருட்களும், 52 ஆயிரத்து 230 கிராம் வெள்ளியும், 1 லட்சத்து 19 ஆயிரம் கிராம் பித்தளையும் உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் அதிக அளவில் காணிக்கையாக கிடைத்துள்ளது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும், அதே போல் அரபு நாடுகளான சவூதி மற்றும் குவைத் நாடுகளைச் சேர்ந்த கரன்சிகளும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தமாக 1,117 வெளிநாட்டு கரன்சிகள் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதத்தை விட 1 கோடி ரூபாய் கூடுதலாக உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.