சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’விடுதலை பாகம் 2’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்துள்ளது. ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். மஞ்சு வாரியர், கென் கருணாஸ், கிஷோர், கௌதம் மேனன் என பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ’விடுதலை பாகம் 2’ திரைப்படமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. விடுதலை 2க்கு பின்பு சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளே தொடங்கப்பட்டுள்ள நிலையில் வெற்றி மாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வெற்றி மாறன் தனது அடுத்த படத்தில் மீண்டும் நடிகர் தனுஷுடன் இணையவுள்ளார்.
தமிழ் சினிமாவில் மற்றுமொரு
— RS Infotainment (@rsinfotainment) January 13, 2025
தலைசிறந்த படைப்பை தந்த
இயக்குநர் திரு.வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு நன்றி #விடுதலைபாகம்2-ன் வெற்றிகரமான 25 நாள்
ரசிகர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.… pic.twitter.com/hD3Gnhh2ap
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ என நான்கு படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைகிறது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி . ’விடுதலை பாகம் 2’ வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்ததையொட்டி திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வெற்றி மாறன் - தனுஷ் இணையும் படத்தைப் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இயக்குனர் வெற்றிமாறனின் 7வது படமான ’விடுதலை பகுதி 2’ வெற்றிக்குப் பிறகு, அவரது இயக்கதில் 9வது படத்தில் நடிப்பு அசுரன் திரு.தனுஷ் அவர்களுடன் இணைவதில் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியடைகிறது. தொடர் வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, புதிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’கேம் சேஞ்சர்’ பட வசூலை மிஞ்சிய ’மதகஜராஜா’... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்த படம் மட்டுமல்லாது விடுதலை 2க்கு பிறகு மீண்டும் நடிகர் சூரி நடிக்கும் படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம். இப்படத்தை வெற்றி மாறன் குழுவைச் சேர்ந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
ராயன் படத்திற்கு பிறகு ’இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் ’குபேரா’ எனும் தெலுங்கு படத்திலும் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.