சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனின் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி கூலிப்படையால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பியோடியதாகவும், அவரை பிடிக்கச் சென்ற போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக கூறப்படும் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் ஆந்திராவில் செப்டம்பர் 22-ம் தேதி கைது செய்தனர். அவரை சென்னை அழைத்துவரப்பட்ட நிலையில், நீலாங்கரையில் போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்பி முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், தற்போது உடல் நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நாகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற அனுமதிக்க கோரியும், தற்போதைய உடல் நலன் குறித்த மருத்துவ அறிக்கையை வழங்க உத்தரவிடக்கோரியிருந்தார்.
இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவரை உடனடியாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாகேந்திரன் உடல் நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.