ஹைதராபாத்: ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற தனியார் நிறுவனம், ஆசியா -ஃபசிபிக் பிராந்தியத்தில் தலைசிறந்த 100 மாநகரங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலை சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிறந்த 33 மாநகரங்களுடன் சீனா இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 27 தலைசிறந்த மாநகரங்களுடன் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. பட்டியலில் ஒன்பது நகரங்களைக் கொண்ட ஜப்பானுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலான பங்களிப்பைக் கொண்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிராந்தியமான ஆசியா - ஃபசிபிக் பகுதிகளில் உள்ள மாநகரங்களை விரிவாக மதிப்பீடு செய்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநகர பகுதிகளின் மக்கள்தொகை (10 லட்சத்துக்கும் மேல்), அந்நகரங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்கள், முதலீட்டாளர்கள், தனிநபர் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, உள்கட்டமைப்பு, சுகாதார வசதி, வீட்டு வாடகை, பிரபலமான முக்கிய இடங்கள், கூகுள் தேடல் உள்ளிட்ட 25 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
100 மாநகரங்களை கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாநகரங்கள் உட்பட மொத்தம் 27 மாநகரங்களுடன் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பட்டியலில் 34வது இடத்தையும், திருச்சிராப்பள்ளி 70வது இடத்தையும் பிடித்துள்ளன. சேலம், கோயமுத்தூர் ஆகிய மாநகரங்கள் முறையே 79, 94 வது இடங்களை பிடித்துள்ளன.
மெரினா கடற்கரை மற்றும் துடிப்பான கலாசார அடையாளங்களால் உலக அளவில் அறியப்படும் இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரமான சென்னை, கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் நிலையான முதலீடுகளை ஈர்த்து வருவதன் மூலம் தெற்காசிய அளவில் பொருளாதார சக்திமிக்க மாநகரில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மகேந்திரா வேர்ல்டு சிட்டி விரிவாக்கம் போன்ற சுற்றுசூழல் பாதுகாப்புடன்கூடிய தொழில் வளர்ச்சி, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கூகுளில் தேடப்படுதல் உள்ளிட்ட காரணிகள். தரவரிசைப் பட்டியலில் சென்னையை 34வது இடத்தை பிடிக்க செய்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, மாநகர பகுதிகளில் சுற்றுசூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை கொண்ட பேருந்துகளை இயக்குவது, மாநகரப் பகுதிகளை பசுமையாக்கும் நோக்கில் மரங்களை வளர்ப்பது போன்ற முன்னெடுப்புகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேற்கொண்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழக அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தொடங்கி சிறு, குறு தொழில் முதலீடுகள் வரையிலும், ஜெர்மனி, தென்கொரியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளையும் திருச்சிராப்பள்ளி பெற்று வருகிறது. இத்தகைய காரணிகளின் அடிப்படையில் பட்டியலில் திருச்சி மாநகரம் 70வது இடத்தைப் பிடித்துள்ளதாக மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் கைத்தறி, ஆடைகள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் சேலம் மாநகரம், இத்துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. சென்னை -சேலம் அதிவிரைவு சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், வாழ்வதற்கான சூழல், பொருளாதார வளம் உள்ளிட்ட காரணிகளை மதிப்பீட்டு சேலம் மாநகருக்கு 79வது இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரெசோனன்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற பெயரை பெற்றுள்ள கோயம்புத்தூர் மாநகரம் இன்று ஆடைகள் உற்பத்தித் துறை துவங்கி தகவல் தொழில்நுட்பம், மின்னணு வாகனங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. கூகுளில் அதிகமாக தேடப்படுவது, குடியிருப்புக்கான வாடகை, மக்களின் பொருளாதார வளம், வாழ்வதற்கான சூழல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கோயம்புத்தூருக்கு தரவரிசை பட்டியலில் 94வது இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.