சென்னை:தமிழ்நாட்டில் மூன்றரை ஆண்டுகளில் 71 ஆயிரத்து 145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (டிச.09) திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, வினா விடை நேரத்தில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பிகளை, புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, “மாதவரம் தொகுதியில் நான்கு துணைமின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்று பதில் அளித்துள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் கேள்வி: மதுரை, கப்பலூர் தொழில் பேட்டையில் பின் நுகர்வு அதிகமாக இருக்கும் காரணத்தினால், துணை மின் நிலையம் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் பதில்:மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கப்பலூர் தொழிற்பேட்டையில் மின் நுகர்வு அதிகரித்துக் கொண்டிருக்கும் காரணத்தினால், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ளது. தொகுதி முழுவதும் 150 மின்கம்பங்கள் அமைப்பதற்கான மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் ரூ.3500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள்... - சட்டப்பேரவையில் கே.என்.நேரு தகவல்!
அந்த பகுதிகளில் மின் நுகர்வு அதிகமாக இருப்பதினால் அங்கு மின்கம்பங்கள் தேவை அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 509 ஓவர் லோடு மின்மாற்றிகள் கணகெடுக்கப்பட்டு, 8 ஆயிரத்து 105 லோ வோல்டேஜ் (Low voltage) மின் மாற்றிகள் கணக்கெடுக்கப்பட்டு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 51 ஆயிரத்து 532 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக இந்த மூன்றரை ஆண்டுகளில் 71 ஆயிரத்து 145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் மின்மாற்றிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு விரைவில் மாற்றி அமைக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.பாலாஜி திருப்பூர் தொகுதி கோவளத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இன்றுவரை நிறுவப்பாடாமல் உள்ளது. எனவே, அவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பேசியதாவது, “393 துணை மின்நிலையங்களுக்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பல பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள துணை மின்நிலையங்களுக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.