லண்டன்: வடமேற்கு இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ளது ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனை. இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருபவர் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன். 50 வயதான இவர் அங்கு இரவுப் பணியில் இருந்த போது, மர்ம நபர் ஒருவரால் கத்தரிக்கோலால் குத்தப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த செவிலியர் அச்சம்மா செரியன், அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பத்தில் 37 வயதான ரூமோன் ஹக் என்பவரை போலீசார் கைது செய்து மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை முயற்சி மற்றும் கொடூர ஆயுதங்கள் வைத்திருப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
"படுகாயம் அடைந்த செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார் என்று நம்பப்படுகிறது," என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செவிலியருடன் நாங்கள் உள்ளோம். மேலும் இது போன்ற கடினமான நேரத்தில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது சக ஊழியர்களுக்கும் ஆதரவளிப்பதே எங்கள் முன்னுரிமை. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக NHS என அழைக்கப்படும் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தயாராக உள்ளனர்" என்று கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் ஓல்ட்ஹாம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் மாட் வாக்கர் கூறினார்.
முன்னதாக, பொதுமக்கள் ஒருவர் செவிலியரைத் தாக்கியபோது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் அவர்கள் தேடவில்லை என்றும் காவல்துறை கூறியது.
இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் தனது அதிர்ச்சியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார்: "ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் நடந்த இந்த கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து செவிலியர் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன என்றார். மேலும், "செவிலியர்கள் தான் தேசிய சுகாதார சேவைகள் இயக்கத்தின் முதுகெலும்பு. அவர்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் வன்முறைக்கு பயப்படாமல் நோயாளிகளைப் பராமரிக்க முடியும். நாங்கள் மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்கிறோம், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றும் அவர் கூறினார்.
மருத்துவமனையை நடத்தும் ஹீதர் காடில், இந்த சம்பவத்தால் "நம்பமுடியாத அளவிற்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக" கூறினார். கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினரின் விசாரணைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்," என்று அவர் கூறினார், மேலும், ராயல் ஓல்ட்ஹாம் மருத்துவமனையில் சேவைகள் வழக்கம் போலவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.