வேலூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா உள்ளிட்டவை நடைபெறும். அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பொங்கல் பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு துவங்கியுள்ள எருது விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் வரும் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 18 கிராமங்களில் எருது விடும் போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே அமைந்துள்ள பனமடங்கி கிராமத்தில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், வேலூர் மாவட்டம், வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
காளைகளுக்கு பரிசு:
போட்டியில் பங்கேற்ற காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. மேலும், இந்த எருது விடும் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு எருது விடும் போட்டியைக் கண்டு ரசித்தனர். போட்டியில் குறிப்பிட்ட இலக்கை வேகமாக கடக்கும் காளைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.75,001; இரண்டாம் பரிசு ரூ.60,001; மூன்றாம் பரிசு ரூ.50,001; நான்காம் பரிசு ரூ.40,001 என மொத்தமாக 50 பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
கிணற்றில் விழுந்த காளைக்கு காயம்:
முன்னதாக வருவாய்த்துறையினர் மூலம் காளை உரிமையாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். விழாவில் பாதுகாப்புப் பணிக்காக 100-க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்போது, சீறி பாய்ந்து ஓடிய காளை ஒன்று அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது காயம் அடைந்தது. அதனை உடனடியாக மீட்ட உரிமையாளர் சிகிச்சை அளித்தார்.
இதையும் படிங்க: கரும்பை சுமந்தபடி மகளுக்கு பொங்கல் சீர்...11 ஆண்டுகளாக தொடரும் பாச நிகழ்வு!
பின்னர், பேட்டி அளித்த விழாக் குழுவினர் கூறியதாவது, "பாரம்பரிய விளையாட்டான எருது விடும் விழாவிற்கு அரசு தரப்பில் பல்வேறு விதமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதில் முக்கியமாக முன்பணமாக 5 லட்சம் ரூபாய் முன்பணமாகச் செலுத்த வேண்டும் என அரசு கூறியுள்ளது.
இதனை ஐம்பதாயிரமாகக் குறைக்க வேண்டும். ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் எருது விடும் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்த கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தற்போது 15 முதல் 20 இடங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.