சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமாக தமிழ்நாடு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சூளைமேடு 109-வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கான ஓட்டப் பந்தயம், பெரியவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, அந்த வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது.
முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம், " உலக பொதுமறையான திருக்குறளை மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உள்ளது. இந்த பொங்கலைப் பொறுத்த வரைக்கும் திருவள்ளுவர் பொங்கலாக நாங்கள் இதை முன்னெடுத்து வருகிறோம். 1,333 திருக்குறளையும் சரியாக சொல்லும் சிறுவர்களுக்கு சிறப்பு பரிசும், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறும் சிறப்பு மிகுந்த நிகழ்வும் நடைபெறும்" என சுகன்யா செல்வம் தெரிவித்தார்.
மேலும், சூளைமேடு வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நாகூர் கூறுகையில், "109-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் வருடம் தோறும் பொங்கல் விழாவை சிறப்பாக செய்து வருகிறார். இந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு சிறப்பாக 200 பேர் கலந்து கொள்ளும் சமத்துவ பொங்கல் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறார். எங்களுடைய வியாபாரிகள் சங்கம் இவர்களோடு இணைந்து போட்டிகளை நடத்தி வருகிறோம்.
ஆண்களுக்கான ஓட்டப் பந்தயம், பெண்களுக்கான ஓட்டப் பந்தயம், சிறுவர்கள் சிறுமிகளுக்கான ஓட்டப் பந்தயம், லெமன் ஸ்பூன், மியூசிக் சேர், கோலப் போட்டி, கயிறு இழுத்தல், உறியடி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, திருக்குறள் போட்டி ஆகியவை நடத்துகிறோம்'' என்றார்.
"நிறைய உறவுகள் கிடைத்தன"
சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஷீலா கோபி பேசுகையில், "இந்த மாதிரியான பொங்கல் விழாவின் அனுபவங்களை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. பெண்களுக்குள் ஏகப்பட்ட மன அழுத்தங்கள் இருக்கும். நிறைய குடும்ப பிரச்சனைகள் இருக்கும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு வருடத்திற்கு ஒரு நாள் தமிழர் திருநாள் அன்று பெண்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியால் நிறைய உறவுகள் நண்பர்கள் கிடைத்துள்ளனர். ஜாதி, மதம், பேதம் இன்றி உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று இல்லாமல், படித்தவர் படிக்காதவர் என்று இல்லாமல், அனைவரும் சேர்ந்து சமத்துவமாக இந்த பொங்கலை கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வதற்கு நன்றிகளை கூறுகிறோம்.
"வாழ்க்கையில் மறக்கவே மாட்டோம்"
நாங்கள் அனைவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். பொங்கல் என்றாலே கிராமம் என்பது தான் நினைவுக்கு வரும். மாடு வைத்திருப்பவர்கள் மாட்டை கொண்டாடுவார்கள், உழவர்களும் சிறப்பாக பொங்கல் கொண்டாடுவார்கள். ஆனால், சென்னையில் இருந்து இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துவது கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி அனைவரும் சேர்ந்து சமத்துவமாக பொங்கல் வைத்தது அனைத்தும் நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பொங்கலை எங்கள் வாழ்க்கையில் மறக்கவே மாட்டோம்" என்றார்.
ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த மாலா பேசுகையில், "எங்களுடைய மாமன்ற உறுப்பினர் எங்களை அழைத்து பொங்கல் வைக்க சொன்னார்கள். பொங்கல் வைக்கும் போது பொங்கல் பானை, கரும்பு, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொடுத்தார்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து அக்கா, தம்பி, தங்கை உறவுகள் போன்று இணைந்து பொங்கல் வைத்தோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுக்கிறார்கள். 200 பேருக்கு மேல் சேர்ந்து இங்கு பொங்கல் வைத்தோம், எங்களுக்கு சேலை கொடுத்தார்கள். நாங்கள் பொங்கல் வைக்கும் போது எங்களுடன் பொங்கல் வைப்பவர்களுக்கு அருகில் இருந்து உதவி செய்தோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக பொங்கல் வைத்தோம் அதுதான் சமத்துவ பொங்கல்" என்று கூறினார்.