சென்னை: துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்திய. இந்த வெற்றிக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அஜித்குமாரின் ரசிகர்கள் இந்த வெற்றியை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் நன்றியும் பொங்கல் வாழ்த்தும் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தின்போது தனக்கு உறுதுணையாக இருந்த நிறுவனத்தாருக்கும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அஜித்குமார், "பந்தைய கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துபாய் ஆட்டோட்ரோம் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. நான் என்னுடைய அஜித் குமார் ரேசிங் அணிக்கும் கடமைபட்டுள்ளேன். நாங்கள் உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள், உங்கள் அழகான குடும்பங்களை விரைவில் சந்திப்போம் என நம்புகிறேன். உங்கள் நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார்.
Thank you note#ajithkumar #AjithKumarRacing #24hdubai #AKRacing #DubaiRaceWeekend #racing #414racing pic.twitter.com/RM8BY177wp
— Ajithkumar Racing (@Akracingoffl) January 15, 2025
முன்னதாக நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், ”துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் நன்றி”, என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: வெற்றிமாறன் - சூர்யா இணையும் ‘வாடிவாசல்’... தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
முன்னதாக துபாயில் உள்ள ஊடகத்திற்கு அஜித்குமார் பேட்டி அளித்திருந்தார். அதில் மனநல முக்கியத்துவம் பற்றி பேசியவர் மேலும் தனது ரசிகர்கள் குறித்து பேசும்போது படத்தை பாருங்கள். அஜித் வாழ்க, விஜய் வாழ்க எனக் கூறுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். நான் உங்களுடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய வாழ்க்கையை கவனியுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன்." எனக் கூறியிருந்தார்.