சென்னை: தமிழ் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடியாக இருப்பவர்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா. நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலிப்பதை போல எல்லோரும் தங்களது காதல் இணையரை காதலித்து கொண்டாட வேண்டும் என இணையத்தில் அடிக்கடி வைரல் செய்வதுண்டு.
அதற்கேற்றாற்போல் அவர்களும் ஜோடியாக இருக்கும் போட்டாக்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்கள். அவ்வகையில் நேற்று(பிப்.14) விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சேர்ந்து காதலர் தின ரீல்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.
காதலர் தினத்திற்கு நிறைய திரைபிரபலங்கள் ஜோடியாக போட்டாக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தாலும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரீல்ஸ் முற்றிலும் வித்தியாசமாக முகமே தெரியாமல் உதடுகள் மட்டும் தெரிவது போல வீடியோவை பகிர்ந்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த தீமா பாடலுக்குதான் இருவரும் உதட்டசைவுடன் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
இந்த பாடலை எழுதியதும் விக்னேஷ் சிவன் தான். இயக்குநராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் வலம் வரும் விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்கள் அனைத்தும் நயன்தாராவை நினைத்தே எழுதப்பட்டது என ஏற்கனவே கூறியுள்ளார். அந்தவகையில் தீமா பாடலும் நயன்தாராவிற்காக டெடிகேட் செய்யப்பட்டதுதான். இந்த இன்ஸ்டாகிராம் ரீல் மில்லியனை கடந்து பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ”எனக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான்”... ’இதயம் முரளி’ பட நிகழ்வில் அதர்வா
இந்த ரீல்ஸ் பதிவிட்டு அதில் விக்னேஷ் சிவன், "பத்தாண்டுகளைக் கடந்த தூய்மையான காதலை போற்றுகிறேன். நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன். காதலிலும் அன்பிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்! தினமும் தூய்மையான நேர்மையான காதலை வெளிப்படுத்தும் என் மனைவிக்கு நன்றி.
3650 நாட்களும் மேலாகக் காதலித்துக் கொண்டிருக்கிறோம்! கடவுளின் ஆசியுடன் மகிழ்ச்சியாக இந்த அன்பை நம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோம்." என எழுதியுள்ளார். இந்த ரீல்ஸ்க்கு கமெண்ட்டில் நயன்தாரா, “நான் என் முழு இதயத்துடனும் ஆன்மாவுடனும் உன்னைக் காதலிக்கிறேன் உயிரே" எனப் பதிவிட்டுள்ளார்.
காதல் தருணங்களை கொண்டாட்டத்துடன் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் வேலையை விக்னேஷ் சிவன் தொடர்ந்து செய்து வருகிறார். அதனாலயே பல காதல் ஜோடிகளும் இவர்களை கொண்டாடி வருகின்றனர்.