வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மூன்றாவது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வுகள் இன்று தொடங்கின.
தமிழ்நாடு-காசியை ஒருங்கிணைக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு முதன் முதலாக கடந்த 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. முதலாவது நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று பிற்பகல் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வுகள் தொடங்கின.
![காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சியில் உரையாற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-02-2025/kasi-1_1502newsroom_1739622832_329.jpg)
இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழின் சிறப்பு, திருக்குறளின் சிறப்பு பற்றி உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பெயரில் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி கலாசார மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை காசி தமிழ் சங்கமம் 3.0-ல் அகத்திய மாமுனிவர் நினைவுகூரப்படுகிறார்,"என்றார்.
இதையும் படிங்க: பள்ளியின் நுழைவாயில்களில் சாதிப் பெயரை எழுதலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி!
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீக பெரியவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், தொழில்முனைவோர்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 200 மாணவர்களும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையேயான கலாசாரரீதியான தொடர்புகள் குறித்து அறியும் வாய்ப்பை அவர்கள் பெறுகின்றனர். அத்துடன் இம்முறை அவர்கள், பிரக்யாராஜ் நகரில் நடைபெறும் மகாகும்பமேளாவில் பங்கேற்கும் வாய்ப்பையும், அயோத்தி ராமரை தரிசிக்கும் பேற்றையும் பெறுகின்றனர்.
தமிழ்நாட்டுக்கும் காசி மாநகருக்கும் இடையேயான பண்டைய நாகரிக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகம் காசி தமிழ் சங்கமம் எனும் கலாசார நிகழ்வை நடத்தி வருகிறது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வு, இன்று தொடங்கி பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.