-By சாலமன்
சென்னை: நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருபவரா நீங்கள்? அல்லது உங்களது குடும்பத்தில் யாராவது அவதிப்பட்டு வருகிறார்களா? பொங்கல் சாப்பிட ஆசையாக இருக்கிறதா? ஆனால், பயம் அதிகமாக உள்ளதா? கவலையை விடுங்கள்... பத்தே நிமிடத்தில் நீங்களும் சுவையான பொங்கலை ருசிக்கலாம். உங்களுக்காகவே இருக்கிறது சம்பா கோதுமை பொங்கல்.
அரிசியல் சமைக்கும் உணவுகளை விட சம்பா கோதுமையில் ருசியான பொங்கலை நீங்களே 10 நிமிடத்தில் தயார் செய்து சாப்பிடலாம்.
சம்பா கோதுமையில் பொங்கலை எப்படி செய்வது என்ற சந்தேகம் இருக்கிறதா? முதலில் ரவை போன்று உடைத்த சம்பா கோதுமையை வாங்கிக் கொள்ளவும். கோதுமையில் அரிசியை விட கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அரிசியை விட கோதுமையை உணவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரிசியில் செய்து உண்ணப்படும் ஒரு சில உணவுகள் போன்றே கோதுமையிலும் அந்த உணவுகளை சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக கோதுமை மாவில் கோதுமை தோசை, உப்புமா, பொங்கல், கூழ் ஆகியவற்றை சமைத்து சாப்பிடலாம்.
சம்பா கோதுமை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
1 கப் சம்பா கோதுமை
1/2 கப் சிறுபருப்பு
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கரிவேப்பிலை ஒரு பிடி
நெய் 4 டீஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு
தேவையான அளவு உப்பு
செய்முறை:
முதலில் சம்பா கோதுமை, சிறுபருப்பை நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும். முதலில் குக்கரில் நெய் சேர்ந்து மிளகு, சீரகம், இஞ்சி, ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். பின்னர் சம்பா கோதுமை மற்றும் சிறுபருப்பிற்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் அளவிற்கு விட்டு பின்னர் அதில் கோதுமை மற்றும் சிறுபருப்பை சேர்த்து குக்கரை மூடி மிதமான சூட்டில் 2 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
பின்னர் குக்கரில் ப்ரஷர் போகும் வரை காத்திருந்து குக்கரை திறந்து தாளிப்பு பாத்திரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து முந்தரி நுணுக்கிய மிளகை சேர்த்து தாளித்து சம்பா கோதுமை பொங்கலில் கலந்து விடவும். சுட சுட கம கம மணத்துடன் ஆரோக்கியமான சம்பா கோதுமை பொங்கல் தயார். சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை பயம் இல்லாமல் சம்பா கோதுமை பொங்கலை ருசித்து சாப்பிடலாம்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
சம்பா கோதுமை பொங்கலின் முக்கியத்துவம் குறித்து, ஈடிவி பாரத் செய்தியாளரிடம் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தாரணி கிருஷ்ணன் பேசுகையில், "அரிசியில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதச்சத்து, கால்சியம் ஆகியவை உள்ளன. ஆனால் கோதுமையில் புரதச்சத்து, பாஸ்பரஸ், மாவுசத்து, பொட்டாசியம் ஆகியவை அரிசியை விட அதிகமாகவும் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகியவையும் போதுமான அளவுக்கு உள்ளன.
கோதுமையில் கரையாத நார்ச்சத்து உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் வைத்திருக்கும். ஆனால், அரிசியில் நார்ச்சத்து இல்லாத காரணத்தால் உடனடியாக சர்க்கரை அளவு அதிகரித்து விடுகிறது. எனவே அரிசி உணவை விட கோதுமை உணவு எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், எதையும் ஒரு அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.