மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மயிலாடுதுறை விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், தற்போது அறுவடைக்குத் தயாராகிய நிலையில், அக்டோபர் மாதத்தில் நடவு செய்த பயிர்கள் முற்றும் தறுவாயில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி மயிலாடுதுறை 105 மி.மீ, மணல்மேடு 23 மி.மீ, சீர்காழி 51 மி.மீ, கொள்ளிடம் 10 மி.மீ, தரங்கம்பாடி 117 மி.மீ, செம்பனார்கோவில் 114 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இதில் அதிகப்படியாக தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது.
மழையில் சேதமான பயிர்கள்:
இதனால், மயிலாடுதுறை, நல்லத்துக்குடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், மூங்கில் தோட்டம், கோடங்குடி, கழனிவாசல், கொற்கை, தாழஞ்சேரி, பாண்டூர், பொன்னூர், காளி, அருண்மொழிதேவன், ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர், மூங்கில்தோட்டம், திருக்கடையூர், காளகஸ்திநாதபுரம், முத்தூர், விசலூர், பெரம்பூர், காட்டுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான பயிர்கள், கதிர்முற்று தருவாயில் இருந்ததால் கனமழையில் பயிர்கள் வயலில் சாய்ந்து தரையோடு தரையாகத் தண்ணீரில் மிதக்கிறது.
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர் (ETV Bharat Tamil Nadu) மேலும் அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு வயலில் விதைப்பு செய்யப்பட்ட உளுந்து, பயிறு வகை பயிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பருவம் தவறிய மழை, இன்னலில் விவசாயி:
இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெல் சாகுபடி செய்து வருவதாகவும், விவசாயிகள் தொடர் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டும் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டும் பருவம் தவறிப் பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைவதோடு உளுந்து, பயிறு வகைகளும் சேதமடைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டாவது அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழை நீரில் மூழ்கிய விவசாய நிலம் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: தரங்கம்பாடியில் பருவம் தவறி பெய்த மழையால் 20,000 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் சேதம்! விவசாயிகள் வேதனை...
சேதமான நெற்பயிர்கள்:
நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் கிடப்பதால், முளைக்கத் தொடங்குவதோடு வயலும் விரைவில் காயாது. இயந்திரம் அறுவடை செய்யும் நேரம் அதிகரிக்கும். இதனால், விவசாயிகளுக்குக் கூடுதல் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் முறையாகக் கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரக் குறிப்பு:
இந்நிலையில் மாவட்ட வேளாண் துறை இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்துக்கு 68,880 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 26,850 ஹெக்டர் நெற்பயிர்கள் நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 541 ஹெக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 269 ஹெக்டர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், 940 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயறு வகை பயிர்கள் 100% அதாவது 940 எக்டேரும் நீரால் சூழப்பட்டுச் சேதமடைந்துள்ளது” என வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.