மதுரை:போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த மனு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
திருநெல்வேலி சேர்ந்த பழனியாச்சி என்பவர் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 7ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல்துறையினர் எனது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்யும் நோக்கில் கடுமையாகத் தாக்கியதில் எனது மகனின் கை, கால்களில் பலத்த காயமடைந்து உள்ளார். மேலும், அவனது காலில் போலீசார் கொலை செய்யும் நோக்கில் சுட்டு உள்ளனர்.
அவரை காவல்துறையினர் முக்கூடல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவரை பார்க்க நானும் எனது தாய் உறவினர்கள் சென்றபோது காவல்துறையினர் பார்க்க விடாமல் தடுத்ததாகவும், இதனால் நாங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்த நிலையில் 8ஆம் தேதி இரவு 11 மணி போல் காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து எனது தாய் மற்றும் எனது சகோதரரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது மகனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்றுள்ளனர்.