சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால், கோயிலில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கோயிலுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருவதாகவும், அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல், கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில், தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும், அது குறித்து அறிக்கை கூற வேண்டும் என்றும் தீட்சிதர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், காணிக்கை மற்றும் வரவு - செலவு கணக்கை பராமரிக்க தனித் திட்டத்தை வகுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.