சென்னை: இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரையில் பல்வேறு ஊர்களில் இருந்து கல்வி, வேலை மற்றும் பிற வசதிகளுக்காக சென்னைக்கு பயணப்பட்டு பின்னர் சென்னையிலேயே வசிக்க துவங்கிவிடும் மக்கள் அதிகம்.
இப்படி வெளியூர்களிலிருந்து சென்னையில் வந்து வசிப்பவர்கள் பலருக்கு சென்னையே முகவரியாக மாறிவிடுகிறது. என்னத்தான் சென்னைவாசியாக மாறினாலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கிடைக்கும் விடுமுறைகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, உற்றார், உறவினர்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடவது வழக்கம்.
இந்நிலையில், பொங்கலையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர். நேற்று இரவு வரையில் பேருந்து நிலையம் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொது போக்குவரத்து மட்டுமின்றி மக்கள் சொந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வெறிச்சோடிய சென்னை மாநகரம்
மேலும், கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழக அரசு இயக்கிய சிறப்பு பேருந்துகள் மூலமாக சுமார் 7 லட்சத்து 59 ஆயிரத்து 48 பேர் பயணித்துள்ளனர். ரயில்களின் மூலமாக சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதாகவும், ஆம்னி பேருந்துகள் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், சொந்த வாகனங்கள் மூலமாக லட்சக்கணக்காண மக்கள் சென்றுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததன் காரணமாக சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: நாங்களும் பொங்கல் கொண்டாடுவோம்.. சென்னை ஏர்போர்ட் சிஐஎஸ்எப் வீரர்கள் அதகளம்..!
சென்னை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசலே... ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி போய் சேர்வதற்குள் மிகவும் சிரமம் ஏற்படும்.
பள்ளி, கல்லூரி, வேலை, அவசரமாக மருத்துவமனை செல்ல, ரயிலை பிடிக்க, பேருந்தை பிடிக்க என சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட சென்னை இன்று போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுப்பட்டுள்ளது. இதனால், ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கும் குறைவாக செல்ல முடிகிறது.
காலியான மவுண்ட் ரோடு
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் சேவியர், '' அண்ணா சாலையில் நிற்க கூட முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆனால் அண்ணா சாலை இவ்வளவு வெறிச்சோடி இருப்பதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. மக்கள் எல்லோரும் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் எப்போதுமே பிசியாக இருக்கும் மவுண்ட் ரோடு காலியாக உள்ளது. இதை பார்க்கும்போது இந்த திருநாள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது என்பது தெரிகிறது. சவாரி செல்லும் போது குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட வேகமாக சென்றுவிடுவதால் நேரம் மிச்சமாகிறது. அரை மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இப்போது 15 நிமிடத்தில் செல்ல முடிகிறது'' என கூறினார்.