சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை தர முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தது முதலே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதால், மும்மொழிக் கொள்கைக்கு வழிவகுக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு தொடர்ந்து கூறி வருகிறது. இரு மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டே வர வேண்டிய கல்வி நிதியான ரூ.2,152 கோடி இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அந்த நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. மேலும், கடந்த வாரம் வாரணாசியில் தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய கல்வி நிதி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி தர இயலாது என்று தெரிவித்தார். அவரது இந்த பதில் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசைக் கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல், இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், மத்திய அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை மூலம் மறைமுகமாக இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூரை அடுத்த அய்யப்பாக்கம் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோலம் போட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோவை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், இந்தித் திணிப்புக்கு எதிராக பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதையை குறிப்பிட்டு, இந்தியை திணிப்பது கட்டாயமெனில், அதனை ஒழிப்பதும் கட்டாயம் என்று பொருள்படும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.