திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கொண்ணம்பட்டி பகுதியில் குடியிருந்து வருபவர் அழகுமலை. இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு உதவியாக சோழவந்தானை சேர்ந்த மனோகர் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அழகுமலைக்கும், இதே ஊரை சேர்ந்த நவீன் என்பருக்கும் 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற திருவிழா நேரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (பிப்.18) இரவு அழகுமலை மற்றும் மனோகர் கட்டிட வேலையை முடித்துவிட்டு வெங்கடாஸ்திரி கோட்டை வழியாக சாலையில் நடந்து வந்தனர்.
அப்போது இருவரும் நடந்து வருவதை பார்த்த நவீன் என்பவர் சவுக்கு கட்டையை எடுத்து வந்து, அழகுமலை மற்றும் மனோகரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அழகுமலை மற்றும் மனோகருக்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில், தாக்குதல் நடத்திய நவீனுக்கும் காயம் ஏற்பட்டது. லேசான காயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த நிலக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன், வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடந்த அழகுமலை, மனோகர் பிரேதங்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இரட்டைக் கொலை வழக்கு: இதுவரை 6 பேர் கைது.. மேலும் ஒரு போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
இதனால், கொண்ணம்பட்டி, வெங்கடாஸ்திரி கோட்டை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.