தேனி: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தந்த ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாலார்பட்டி கிராம மக்கள் 26-வது ஆண்டாக பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி தந்த பொறியாளர் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் நாளை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள், பொங்கள் திருநாளன்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, இந்த வருடம் தை திருநாளான இன்று ஜான் பென்னிகுயிக் 184 வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராம மக்கள் 26-வது ஆண்டாக அவருக்கு பொங்கல் வைத்து கொண்டாட்டியுள்ளனர். இதில், பாலார்பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இசை வாத்தியங்களுடன், தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி, காளை மாடுகளுடன் பென்னிகுயிக் திரு உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு, பொங்கல் பானையுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்து சிறப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் திமிறி பாயும் காளைகள்! பகல் நிலவரம் என்ன?
இதில், மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்திருந்த பெண்களும் இணைந்து ஊர்வலம் வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து ஊரின் மையத்தில் உள்ள ஜான் பென்னிகுயிக் நினைவு அரங்கம் முன்பு, கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக பொங்கல் வைத்துள்ளனர். பின்னர், பென்னிகுயிக் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, தீபாராதனைகள் காட்டி மரியாதை செலுத்தி வணங்கியுள்ளனர்.
இது குறித்து மலேசியாவில் இருந்து வந்திருந்தவர்கள் கூறுகையில், “இந்த அளவிற்கு மிகச்சிறப்பாக பொங்கல் கொண்டாட்டத்தை கண்டதில்லை. பென்னிகுயிக் பற்றி தங்களுக்கு தெரியாத நிலையில், முல்லைப் பெரியாறு அணை சென்று வந்த பிறகு, பென்னிகுயிக் பெருமை எங்களுக்கு தெரிய வந்துள்ளது. கிராமத்து மக்களுடைய தேவராட்டம் தங்களை கவர்ந்துள்ளது. தாங்களும் அதற்கு பழகி ஆட விரும்புகிறோம். அடுத்த ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வந்து பங்கேற்க விரும்புகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.