கரூர்:பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடி காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் விரக்தியடைந்த கரூரை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கரூர் மாநகரில் அமைந்துள்ள குல்லா தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி-பாத்திமா பீவி தம்பதியர். ஜெய்லானி டீ மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பீவி அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு குடும்பத்திற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க 33,000 ரூபாய்க்கு கடன் பெற ஜாமீன் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மூன்று மாதங்களாக சரியாக தவணை கட்டி வந்த குடும்பம் திடீரென தவணையை கட்டாமல் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், பைனான்ஸ் நிறுவனத்தினர் கடன் வாங்கி கொடுத்த பாத்திமாபீவியை தங்களது நிறுவனத்திற்கு அழைத்து தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அதிக வட்டி வசூலித்ததாகவும் கரூர் நகர காவல் நிலையத்தில் கைப்பட புகார் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட கரூர் நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பாத்திமா பீவி கடந்த ஜனவரி 20ஆம் தேதி வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு நள்ள முறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காவல்துறை அழுத்தம் கொடுத்ததன் பேரில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாத்திமா பீவி கடந்த ஜன.22 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இறப்பதற்கு முன்பு பாத்திமா பீவி பேசிய வீடியோவும், கடிதமும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது.