சேலம்: தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செல்வன் சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "தஞ்சாவூர் பாரத் பெட்ரோலியத்தின் எல்பிஜி சிலிண்டர் ஆலையில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி ஒப்பந்தம் விடப்பட்டது. புதிய ஒப்பந்தத்திற்கான அன்லோடிங் (Unloading) ஓட்டுநர் சம்பளம் பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அதில் தற்போது உள்ள விலையோடு 50 ரூபாய் மட்டும் சேர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கிட முடிவு செய்யப்பட்டது .
அதனை அடுத்து மற்ற கோரிக்கைகள் குறித்து இந்த மாதம் ஏப்ரல் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டது . ஆனால் பேச்சுவார்த்தையை மீறி தஞ்சாவூர் எல்பிஜி சிலிண்டர் ஆலையின் அதிகாரிகள், கேஸ் வினியோகஸ்தர்களிடம் தற்போது உள்ள இறக்கு கூலியை 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளனர்.
அதன் பின்னர் இறக்கு கூலி 600 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய வாடகையை விட தற்போது குறைத்து வழங்கி வருகிறது. இது குறித்து நாங்கள் அதிகாரிகளிடம் மற்றும் வினியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
இதனால் சென்ற ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் மதுரை, கோவை, தூத்துக்குடி என பல்வேறு இடங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஏழு கேஸ் ஆலைகளில் இயங்கி வந்த 500 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து, பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இதனால் கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ,சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கணவர் சொத்துக்காகப் போடப்பட்ட பாகப்பிரிவினை வழக்கு தள்ளுபடி: நீதிமன்ற வளாகத்தில் மனைவி தற்கொலை!