புதுடெல்லி: 2024 பொதுத் தேர்தல் குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தவறான தகவலை தெரிவித்ததற்கு மெட்டா இந்தியா மன்னிப்பு கேட்டுள்ளது.
பிரபல சமுக ஊடக நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் மார்க் ஜுக்கர்பெர்க். இவர் அண்மையில் போட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, '' 2024 தேர்தல்களில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் கரோனா காலத்தில் நிலைமையை சமாளிக்க முடியாததால் மக்களின் எதிர்ப்பை பெற்று தோல்வியை தழுவினர்'' என கூறியிருந்தார்.
மார்க்கின் இந்த பேச்சு இந்தியாவில் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இதற்கு எதிர்வினை ஆற்றி இருந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்கள் தவறானவை என மறுத்ததோடு, உண்மைகளையும், நம்பகத்தன்மையையும் மெட்டா நிலைநிறுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மேலும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,'' உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடந்த 2024 தேர்தலை 640 மில்லியன் வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி மீதான தங்கள் நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: "மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை.."- ரயில்வே அமைச்சகம் 'திடீர்' விளக்கம்!
2024 தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் கரோனா தொற்றுக்குப் பின் தோற்றுவிட்டன என்ற ஜுக்கர்பெர்க்கின் கூற்று உண்மையில் தவறானது. 800 மில்லியனுக்கு இலவச உணவு, 2.2 பில்லியன் இலவச தடுப்பூசிகள், கோவிட் சமயத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி செய்தது, வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்தும் பிரதமர் மோடியின் தீர்க்கமான 3-வது வெற்றியானது நல்லாட்சி மற்றும் மக்கள் நம்பிக்கைக்கு சான்றாகும். மார்க் ஜுக்கர்பெர்க்கின் தவறான தகவலைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு மெட்டா இந்தியா இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரால், '' அன்புள்ள அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2024 தேர்தல்களில் ஆட்சியில் இருந்த பல கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மார்க்கின் கூற்று பல நாடுகளுக்கு பொருந்தும். ஆனால், அது இந்தியாவுக்கு கிடையாது. இந்த கவனக்குறைவான பிழைக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான நாடாக உள்ளது. மேலும் இந்தியாவின் புதுமையான எதிர்காலத்தின் இதயத்தில் இருக்க நாங்கள் (மெட்டா) எதிர்நோக்குகிறோம்'' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.