மக்களை போன் மூலம் தொடர்பு கொள்ளும் மாவட்ட ஆட்சியர் தருமபுரி: அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவைதை குறித்தும், மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "நீங்கள் நலமா?" எனும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார்.
அதன் அடிப்படையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தங்கள் பகுதியில் அரசிடம் பல்வேறு உதவிகளைக் கோரி மனு அளித்த மக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கை மீது அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, அரசிடம் கோரிக்கை மனு அளித்த மக்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தனது செயற்கை கால் வழங்கக் கோரி மனு அளித்திருந்த குப்புராஜ் என்பவரை தொடர்பு கொண்டு, தனக்கு அளிக்கப்பட்ட செயற்கை கால் குறித்து விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து, அஜினா டொக்குபோதனஅள்ளி பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர், நில அளவை செய்யக் கோரி மனு குறித்து விசாரணை செய்தார். அப்போது, கவிதா என்பவரின் கணவர் பேசினார். அப்போது, பேசுவது யார் என்று கேட்க, நான் தருமபுரி ஆட்சியர் பேசுகிறேன், கவிதா எங்கே என்று கேட்டார்.
உடனே, கவிதா வேலைக்கு சென்று விட்டதாகக் கூறினார். பின்னர், நில அளவீடு செய்யக் கோரி அளித்த மனு குறித்து விசாரணை மேற்கொண்டார். அதற்கு, அரசு அலுவலர்கள் வந்து நில அளவீடு செய்ததாகவும், தங்களுக்கு மாற்று இடம் தருவதாகக் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், உரிய மனு அளித்து மாற்று இடம் பெற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தினார். மேலும், மனு அளித்த பலரிடம் விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க:"கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தேர்தலில் போட்டி" - தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு!