செங்கல்பட்டு: மாமல்லபுரம் திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா இன்று (ஜனவரி 10) தொடங்கி வருகிற 12-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக, 10-வது ஆண்டாக சர்வதேச பலூன் திருவிழா இன்று (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்துள்ளனர். தொடர்ந்து, பலூன்களில் ஏறி அமைச்சர்கள் பயணம் செய்தனர்.
பலூன் திருவிழா:
சர்வதேச பலூன் திருவிழா இன்று துவங்கி தொடர்ந்து ஜனவரி 12 ஆம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்காக, பிரேசில், ஆஸ்திரேலியா, பிரட்டன், ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட சூடான காற்றுடன் ராட்சத பலூன்களை பறக்க விடும் வல்லுனர்கள் வந்துள்ளனர்.
இவர்கள், சிறப்பு வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட பலூன்களை பறக்கவிட்டுள்ளனர். இந்த ராட்சச பலூன்கள் அதிகபட்சமாக 50 அடி தூரம் வரை பறக்க கூடியதாகும். மேலும், இந்த பலூன்கள் பறப்பதற்கு ஆட்டோ எல்பிஜி கேஸ் (Auto LPG GAS) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தின் முதல் மிதக்கும் படகு உணவகம்.. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்!
இந்நிலையில், மாமல்லபுரத்தில் முதன்முறையாக நடைபெற்ற பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். பலூன் திருவிழாவை காணவரும் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 வயது வரை உள்ளவர்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.200 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுகிறது.
பலூன் திருவிழாவை பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏறி பயணம் மேற்கொள்ள தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து, பொள்ளாச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் பலூன் திருவிழா நடைபெற உள்ளதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், “ சர்வதேச பலூன் திருவிழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொள்ளாச்சியிலும், மதுரை ஏறு தழுவுதல் அரங்கத்திலும் நடைபெற உள்ளது” என்றார். தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதன்முறையாக திறந்து வைக்கப்பட்ட மிதக்கும் படகு உணவகத்திற்கான கட்டணம் இன்று அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.