சென்னை: குடியரசு தினமான நாளை மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கபட வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
தேநீர் விருந்துக்கு அழைப்பு: இந்த நிலையில் மரபுபடி நாளை குடியரசு தினத்தன்று சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்படும் குடியரசு தின அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
குடியரசு தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். தேநீர் விருந்துக்கு வரும்படி தமிழ்நாடு அரசு, சட்டப் பேரவையில் இடம் பெறறுள்ள கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தேநீர் விருந்துக்கு வரும்படி ஆளுநர் மாளிகையில் இருந்து வழக்கம்போல் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு: இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி முதலில் அறிவித்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே இதனை கண்டிக்கும் வகையில் ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிக்கிறது," எனக் கூறப்பட்டிருந்தது.
இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில்,"அரசியலமைப்பின் சாசனம், கூட்டாட்சி கோட்பாடுகள், சட்டமன்ற மாண்புகள் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று கூறியிருந்தார். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. ஆனால், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக, தவெக கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.