சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா கலந்துகொண்டு தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மேயர் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இதேபோல் சென்னை சுங்க இல்லத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சுங்கத்துறையின் சென்னை மண்டல தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ். குமார் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், சுங்கத்துறை ஆணையர்கள், துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக சுங்கத்துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள், சிறப்பாக பணியாற்றியவர்கள், அணிவகுப்பில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், புதிதாக கட்டப்பட்ட சுங்கத்துறை நுழைவாயிலை ஏ.ஆர்.எஸ். குமார் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழா: முதலமைச்சரிடம் விருது பெற்ற நபர்களின் முழு விவரம்!
நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஆணையர் குமார், '' நம் நாட்டின் இறையாண்மை ஒற்றுமையை போற்றி, நம் நாட்டுக்காக போராடியவர்களை நினைவு கூர்ந்து , ராணுவ வீரர்கள், விவசாயிகள், நம் நாட்டின் கட்டமைப்புக்கு உதவும் ஆசிரியர்கள், மருத்துவர்கள் என நாட்டின் மேன்மைக்கு உதவும் அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். தேசிய கொடியின் ஒவ்வொரு நிறமும், தேசிய கீதத்தின் ஒவ்வொரு வரியும், நம் ஒற்றுமை, பலத்தை குறிக்கிறது'' என்றார்.
இதேபோல், சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் மோகன் தேசியக் கொடியை ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு, ஊழியர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். இதேபோல், சென்னை அண்ணா சாலையில் உள்ள மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை தலைமை தாங்கிய முதன்மை கணக்காயர் கே.பி. ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.