சென்னை: குடியரசு தின விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கும், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற துறைகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.27) கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
சென்னை, காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிங்க: போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.206.63 கோடி... தமிழக அரசு ஒதுக்கீடு!
அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளையும், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.
இந்நிலையில், குடியரசு தின விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் கொளத்தூர், எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் முதல் பரிசு பெற்றனர். மயிலாப்பூர், சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் இரண்டாம் பரிசு பெற்றனர். அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் மூன்றாம் பரிசு பெற்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதேபோல, கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற ராணி மேரி கல்லூரி மாணவியர்களுக்கும், இரண்டாம் பரிசு பெற்ற கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
குடியரசு தின விழாவில், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பினருக்கும் பரிசுகளும், கேடயங்களையும் வழங்கி முதலமைச்சர் வாழ்த்தினார்.