தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியில் நேற்று இரவு ( ஜன.26) மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வலையில் கடற்பசு ஒன்று சிக்கியுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கடல் பசு குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின் கவியரசன் மற்றும் மற்ற மீனவர்கள் அந்த கடற்பசுவை மீன் வலையிலிருந்து மீட்டு அதை மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை வன சரக அலுவலர் சந்திரசேகர் மற்றும் வனத்துறையினர் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு கீழத்தோட்டம் கடற்கரை பகுதிக்கு சென்று கடல் பசுவை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
இது குறித்து பேசிய மீனவர் கவியரசன், “ தமிழக அரசு மீனவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடற்பசு வலையில் சிக்கினால், பத்திரமாக கடலுக்குள் விட கற்று கொடுத்துள்ளனர். மேலும் வலையில் சிக்கும் கடற்பசுவை மீனவர்கள் கடலுக்குள் விட்டால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்” என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலூர் கலெக்டர் ஆபிஸில் உலாவிய 4 அடி நீள கண்ணாடி விரியன்.. பத்திரமாக மீட்ட வனத்துறை!
அதனால், அந்த கடற்பசுவை பத்திரமாக மீன் வலையிலிருந்து எடுத்து, மீட்டு மீண்டும் கடலில் பத்திரமாக விட்டுவிட்டோம். இதையடுத்து கடற்கரைக்கு வனத்துறையினர் இங்கு வந்தனர். நாங்கள் கடலுக்குள் கடற்பசுவை விட்டதற்கு பாராட்டுகள் தெரிவித்தனர். மேலும், ஊக்கத் தொகை தருவதாகவும் கூறினார்கள்” என்றார்.