திருநெல்வேலி: அகில உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் நெல்லையில் இன்று (ஜன.26) கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆர் பேரவையின் தலைவரும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி கலந்து கொண்டார். அதேபோல, நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். மேலும், இந்த விழாவில் திரளான எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் பங்கு பெற்றனர்.
எம்ஜிஆர் விசுவாசி
விழாவில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '' எம்ஜிஆர் தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவர். இந்த விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போன்ற ஓர் அவதார புருஷன் அரசியல்வாதியாக தமிழ்நாட்டில் வரவேண்டும்; நமது நாடு செழிக்க வேண்டும். ஒரு மனிதன் இறந்து 37 ஆண்டுகள் ஆன பிறகும்கூட இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அது எம்ஜிஆருக்கு மட்டும்தான் வரும்'' என்று கூறினார்.
நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவின் மாநில துணைத்தலைவர் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் என முக்கிய பொறுப்பில் இருந்தாலும் கூட அடிப்படையாக அவர் தீவிர எம்.ஜி.ஆர். விசுவாசி. எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் முன்னணி நிர்வாகியாக வலம் வந்த நயினார் நாகேந்திரன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி வகித்தவர்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: எஸ்ஐடி விசாரணைக் கேட்கும் விஜய்!
அதிமுகவினரை கவரும் நயினார்
அதிமுகவில் நெல்லையின் முக்கிய அடையாளமாக பார்க்கப்பட்ட நயினார் நாகேந்திரன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு திடீரென பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனாலும் இன்றளவும் நெல்லையின் கிராம பகுதிகளில் நயினார் நாகேந்திரன் அதிமுக-காரராகவே மக்கள் பார்க்கின்றனர்.
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தல் நேரங்களில் அதிமுக வாக்குகளை கவர நயினார் நாகேந்திரன் எம்ஜிஆரின் உருவப்படத்தையும், அவரது பாடல்களையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் அவரது கணக்குப்படி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் அதிமுக வேட்பாளரை விட வாக்குகள் அதிகம் பெற்றார்.
ரெய்டு தேவையில்லை
இதன் மூலம் அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்திருப்பதை பார்க்க முடிந்தது. எனவே, பாஜகவில் இருந்தாலும் இன்னும் அவருக்கு அதிமுக மீது பாசம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகின்றனர். அதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைய ரெய்டு நடத்த தேவையில்லை.. எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே போதும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது போன்ற சூழ்நிலையில் அதிமுகவின் தலைவரான எம்ஜி ஆர் பிறந்தநாள் விழாவில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டிருப்பது அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது.