இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் என்.சி.டி.ஐ.ஆர் (National Centre for Disease Informatics and Research - NCDIR) நடத்திய ஆய்வின்படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் (IJMR) வெளியிடப்பட்ட ஆய்வில், 29 பெண்களில் ஒருவருக்கும், 67 ஆண்களில் ஒருவருக்கும் முறையே மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
- ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் 14.6 லட்சம் இந்தியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில், ஆண்கள் நுரையீரல் மற்றும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இளம் வயதினர் (0-14 வயது) மத்தியல் லிம்பாய்டு லுகேமியா வீரியம் அதிகமாக உள்ளது. இதனால், 29.2 % சிறுவர்கள் மற்றும் 24.2% சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2020 உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் ஏற்படும் வளர்ச்சியும் மாற்றங்களும் புற்றுநோய் வழக்குகளின் அதிகரிப்புக்கு காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் 60 வயதிற்கு அதிகமானவர்கள் 2011 ல் 8.6 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில் 2022ல் 9.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயை மருத்துவ பரிசோதனை மூலம் முன்கூட்டியே அறிவது, குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கிரினிங் செய்வது போன்றவை உயிரிழப்புகளை தடுப்பதாக கூறுகின்றனர்.
புற்றுநோய் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டியவை:
போதைக்கு 'நோ': போதைக்கு அடிமையாவதைக் தவிர்ப்பது, புகையிலை மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும் புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கின்றனர்.
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு: தினமும் 60 முதல் 90 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது மற்றும் உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான உணவு உட்கொள்வது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
மருத்துவ ஆலோசனை: 45 வயதில் தொடங்கி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேமோகிராபி (Mammography) பரிசோதனை, 35 வயதில் தொடங்கி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை PAP ஸ்மியர்ஸ் மற்றும் 50 வயதில் தொடங்கி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் கொலோனோஸ்கோபி (Colonoscopy) பரிசோதனை செய்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியலாம்.
HPV பரிசோதனை: புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 79 ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பதை தவிர்க்கலாம் என்கிறது ஆய்வு. women health survey நடத்திய ஆய்வில், 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 72% பெண்கள் HPV பரிசோதனை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. உரிய புற்றுநோய் மற்றும் HPV பரிசோதனை புற்றுநோய் ஏற்படுத்தும் விளைவுகளை தடுக்கிறது.
இதையும் படிங்க: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இங்கே, உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கிறோம்.